Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

டி.என்.ஏ திரைவிமர்சனம்

DNA Movie review

நாயகன் அதர்வா, காதல் தோல்வியால் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். இவருக்கு, வயதுக்கேற்ற மனவளர்ச்சி இன்றி வாழ்ந்து வரும் நிமிஷா சஜயனை குடும்பத்தார் திருமணம் செய்து வைக்கிறார்கள்.மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் அதர்வா-நிமிஷா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பமே குழந்தை பிறந்ததை கொண்டாடிக் கொண்டிருக்கிற நிலையில் நிமிஷா சஜயன் கையில் இருக்கும் குழந்தை என் குழந்தை இல்லை என திடீரென கதறி துடிக்கிறார். ஒரு கட்டத்தில் குழந்தை மாற்றப்பட்டிருப்பது அதர்வாவுக்கு தெரிய வருகிறது.இறுதியில் அதர்வா, நிமிஷா சஜயன் தம்பதிக்கு குழந்தை கிடைத்ததா? குழந்தையை மாற்றியது யார்? எதற்காக மாற்றினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அதர்வா, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதர்வாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். ஆரம்பம் முதல் கடைசி வரை நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். காதல் தோல்வி, மனைவியுடன் அன்பாக இருப்பது, குழந்தையை தேடுவது, என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் நிமிஷா சஜயனுக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். அந்த அளவிற்கு நடிப்பால் பளிச்சிடுகிறார். குறிப்பாக குழந்தைக்காக கதறும் காட்சிகளில் கண்ணீரை வரவழைக்கிறார். படத்தின் மொத்த கதையையும் அதர்வாவும், நிமிஷா சஜயனும் தோளில் சுமந்து செல்கின்றனர். இருவருக்குமான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. சேத்தன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரித்விகா, சுப்பிரமணி சிவா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஆக்சன் மற்றும் கிரைம், உணர்வுப்பூர்வமான காட்சிகளோடு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல், பாசம், தவிப்பு, என குடும்பத்தினர் ஏற்கும் வகையில் கொடுத்து இருக்கிறார். தப்பு செஞ்சவங்க யாரும் தப்பிக்கிறது இல்ல… தண்டனை காலம் தள்ளி போயிருக்கிறது என்று சொல்லி இருப்பது சிறப்பு.

பாடல்கள் பெரியதாக கவரவில்லை என்றாலும் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

பார்த்திபனின் ஒளிப்பதிவு கதையோடு பயணித்து காட்சிகளுக்கு மெருகூட்டிகிறது.

Olympia Movies நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

DNA Movie review