Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனாவை அலட்சியமாக கருதாதீர்கள் – நோய் தொற்றிலிருந்து மீண்ட சரத்குமார் வேண்டுகோள்

Do not ignore the corona - Sarathkumar's request to recover from the infection

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்குமார், நேற்று வீடு திரும்பினார். இதையடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 8 அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.

உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயக்குமார், ரவிக்கிரண், சந்திரகாந்த் செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மை பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.

மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்

இருப்பினும், கொரோனா தொற்று உலகில் பல மக்களை தற்போதும் பாதித்து வருகிறது. கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.