கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சுஷாந்த் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனா அவரது புகைப்படங்களையும் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள சுஷாந்த், திரைப்பட மாஃபியா உன்னை தடை செய்தது, துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டிருக்கிறாய். அப்போது உன்னுடன் நான் உறுதுணையாக நிற்கவில்லையே என்று வருந்துகிறேன். சமூக வலைதள சித்ரவதைகளை நீயாகவே சமாளித்து விடுவாய் என்று நான் நினைத்திருக்க கூடாது என்று விரும்புகிறேன்.
சுஷாந்த் இறப்பதற்கு முன்னால், திரைப்பட மாஃபியா கும்பல் தன்னை சினிமாவிலிருந்து தூக்கியெறிய முயற்சி செய்தது என்றும் தன்னுடைய படத்தை வெற்றிபெறச் செய்யுமாறு தன் நண்பர்களிடம் உதவி கேட்டது குறித்தும் சுஷாந்த் எழுதியதை மறந்து விட வேண்டாம். அவர் தன்னுடைய பேட்டிகளில் வாரிசு அரசியலை பற்றி குற்றம்சாட்டியிருந்தார். அவருடைய ப்ளாக்பஸ்டர் படங்கள் எல்லாம் தோல்விப்படங்களாக அறிவிக்கப்பட்டன.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தன்னை தடை செய்தது பற்றியும், கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றி பின்பு ஒட்டு மொத்த உலகத்திடம் சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என்று அழுதது பற்றியும் சுஷாந்த் கூறியதை மறந்துவிட வேண்டாம்.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் சுஷாந்த்தை கொன்றுள்ளனர். அதை தான் இறப்பதற்கு முன்னால் அவரே தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறக்கவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
இவ்வாறு கங்கனா தன் பதிவில் கூறியுள்ளார்.