கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள்.
அப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார்.
இறுதியில் நாயகன் சிம்பு, வில்லனிடம் இருந்து பாரதிராஜா குடும்பத்தை காப்பாற்றினாரா? பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன? ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிம்பு நடிப்பை பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு மட்டுமே ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார்.
நாயகியாக வரும் நிதி அகர்வாலின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் நந்திதா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார் பாரதிராஜா. இவருடைய அனுபவ நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பால சரவணனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடியில் கலக்கி இருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் குறுகிய நாட்களில் படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்திரன். புதுமையான யோசனைகள், ஆனால் பயனற்ற திருப்பங்கள் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது. சிம்புக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது.
அதிக நேரம் பாரதிராஜாதான் திரையில் தோன்றுகிறார். சிம்புவின் நடிப்பு திறனை இயக்குனர் சுசீந்திரன் முழுமையாக உபயோகப் படுத்தவில்லை என்று தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம். திருவின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை அழகாக காண்பித்து இருக்கிறார்.
மொத்தத்தில் ஈஸ்வரன் சாதாரணமானவன்.