தமிழில் வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன.
சூர்யாவின் சிங்கம், லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. அரண்மனை பேய் படத்தின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகமும் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் ஆர்யா, ராஷிகன்னா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். சுந்தர்.சி இயக்கி உள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார்.
இதையடுத்து அரண்மனை 4-ம் பாகத்தையும் எடுக்க சுந்தர்.சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்துள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.