Tamilstar
Movie Reviews

காட் ஃபாதர் திரை விமர்சனம்

godfather tamil movie

சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார்.

இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். இந்த மகனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனது குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் லால், நட்ராஜ் மகனின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துக் கொள்கிறார். இதனால், நட்ராஜின் மகனை கொன்று இதயத்தை எடுத்து மகனுக்கு பொருத்த நினைக்கிறார். இதையறிந்த நட்ராஜ் தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடுகிறார்.

இறுதியில் லால் தன் திட்டத்தை முடித்து மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ், பொறுப்பான கணவராகவும், பாசமான அப்பாவாகவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக மகனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நாயகி அனன்யா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவரின் அமைதியான குணத்துக்கு நேர் எதிரான குணத்தையும் அதே நேரத்தில் மகன் ஆபத்தில் சிக்கியதும் அவர் காட்டும் பரிதவிப்பும் சிறப்பு.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் லால். தான் நினைத்தவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரின் மிரட்டல் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சின்ன சின்ன அசைவுகளால் ரசிக்க வைத்திருக்கிறார் சிறுவன் அஸ்வந்த். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவர் மறைக்கப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

சிறிய கதையை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். குறைந்த நடிகர்களை கொண்டு ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளேயே கதையை முக்கால்வாசி நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு சமமாக திகிலூட்டுகின்றன. நவின் ரவீந்தரனின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ கனகச்சிதம்.