அஜித் குமார் மும்பையில் பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். இவரது மனைவி திரிஷா. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. என் மகன் ஒரு கேங்ஸ்டர் மகனாக வளரக் கூடாது என்று அஜித்திடம் சண்டை போட்டு மகனை பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். மேலும் மகனை ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார். மும்பையில் அஜித், செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு ஜெயிலில் இருக்கிறார். 18 வருடங்கள் ஆன நிலையில், மகனை சந்திக்க நல்ல மனிதனாக வருகிறார். இருப்பினும் பழைய விரோதம் அவரை துரத்துகிறது. மேலும் மகனை மர்ம கும்பல் ஒன்று போதை மருந்து வழக்கில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்புகிறது. இறுதியில் தனது மகனை ஜெயிலில் இருந்து விடுவித்தாரா? மர்ம கும்பல் யார்? எதற்காக அஜித் மகனை சிக்க வைத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அஜித் குமார், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். ஆக்ஷன், உடல் மொழி, நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். தான் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை பேசி ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கிறார். இளமை, முதுமை, புதுமை என கெட்டப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.நாயகியாக நடித்து இருக்கும் திரிஷா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவன் பாசம், மகன் பாசம் என கவனிக்க வைத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் இரட்டிப்பாக மிரட்டி இருக்கிறார் அர்ஜுன் தாஸ். சில காட்சிகள் மட்டுமே வந்து அசத்தி இருக்கிறார் சாக்கோ. பிரபு, பிரசன்னா, சுனில் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் வரும் சிம்ரன் பழைய நினைவுகளோடு அஜித்துடன் செல்போனில் ரொமான்ஸ் செய்வதும் அவரிடம் இடுப்பை நன்றாக பார்த்துக் கோ என அஜித் சொல்லும்போது ரசிகர்களின் குதூகலம் அமர்க்களபடுகிறது.
மகனை ஜெயிலில் இருந்து காப்பாற்ற போராடும் தந்தை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக படத்தை இயக்கி இருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகள் கூஸ்பம்பாக அமைந்து இருக்கிறது. பல காட்சிகள் மாஸாக அமைத்து ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார். அஜித் நடித்த வசனங்கள், காட்சிகள் மட்டுமில்லாமல், விஜய் வசனம், கமல் பாடல் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி திரைக்கதை அமைத்து இருப்பது சிறப்பு.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் பயங்கரமாக கொடுத்து இருக்கிறார்.
அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.”,
