குறட்டையால் அவதிப்படும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்த படம்.
அம்மா, அக்கா, தங்கை, மாமா என எளிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன். தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மணிகண்டனுக்கு இருப்பதால் பல இடங்களில் அசிங்கப்படுகிறார். இந்த பிரச்சனையால் அவர் செல்லும் இடங்களில் பார்த்து பார்த்து நடந்து கொள்கிறார். இவர் காதலிக்கும் பெண் இந்த குறட்டை சத்தத்தினால் மணிகண்டனை விட்டு சென்றுவிடுகிறார்.
இதனிடையே மீத்தா ரகுநாத்தை சந்திக்கும் மணிகண்டன் அவர் மீது காதல் கொள்கிறார். தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வரும் மீத்தா, யாரிடம் நெருங்கி பழகினாலும் அவர் இறந்து விடுவார் என்ற பயத்தில் வாழ்ந்து வருகிறார். இதனால் தனக்கு பிடித்திருக்கும் எந்த நபரிடமும் மீத்தா பழகாமல் இருந்து வருகிறார். ஒருவழியாக மணிகண்டனும் மீத்தாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன்பின்னர் இந்த குறட்டை சத்தத்தினால் மீத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
இறுதியில் மீத்தா இதிலிருந்து எப்படி மீள்கிறார்? மீத்தாவுக்கும் மணிகண்டனுக்கும் என்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
குறட்டை நாயகனாக வரும் மணிகண்டன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து கைத்தட்டல் பெறுகிறார். இந்த பிரச்சனையால் நண்பர்கள் மத்தியில் கிண்டல்களுக்கு உள்ளாவது, அசிங்கப்படுவது என பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மணிகண்டனின் மனைவியாக வரும் மீத்தா அழகான நடிப்பை கொடுத்துள்ளார். பல இடங்களில் நம் குடும்பத்து பெண் என்ற எண்ணம் தோன்றும்படி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மணிகண்டனின் மாமாவாக வரும் ரமேஷ் திலக் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார். மச்சானுடன் ஜாலியாக உரையாடும் இடங்களில் ரசிகர்களை கொள்ளையடிக்கிறார். ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் என பலரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
எதார்த்த மனிதனுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனையால் என்ன என்ன விளைவுகளை சந்திக்கிறார் என்பதை மையக்கருத்தாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். சிறப்பான திரைக்கதை, கதாப்பாத்திர தேர்வு, காமெடி கலந்த வசனங்கள் என அனைத்தையும் சரியாக கையாண்டு பாராட்டுக்களை பெறுகிறார். மனைவிக்கும் கணவனுக்கும் இருக்கும் புரிதல்களை அழகாக வெளிப்படுத்தி கண்கலங்க வைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.
ஜெயந்த் சேது மாதவனின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தை அழகுப்படுத்தியுள்ளது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
மொத்தத்தில் குட் நைட் – ஸ்வீட் நைட்.