Tamilstar
Movie Reviews

ஜிப்ஸி திரைவிமர்சனம்

gypsy movie

ஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது.

சீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே… சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார். நாகூரில் தங்கி இருக்கும்போது அங்கு கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தில் இருக்கும் நடாஷாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்துவிடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். அதிலும் சென்சார் பிரச்சினையால் கறுப்பு வெள்ளையாக்கப்பட்ட அந்த இடைவேளை காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. இறுதி காட்சியில் வன்முறைக்கும் மனிதத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையாக இருந்து படத்தை எழுதி இயக்கிய ராஜூமுருகனுக்கு பாராட்டுகள்.

ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எந்த காட்சியிலும் ஜீவா தெரியாமல் ஜிப்ஸியாக வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பாக ரசிக்க வைக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் நம்மை உருகி நெகிழ வைக்கிறார். கதாபாத்திரத்தின் மனநிலை, கதையோட்டம் இரண்டையும் தனது நடிப்பாலும் உடல்மொழிகளாலும் காட்டி அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை பார்க்கும்போது அவர் கண்களில் தெரியும் பாசம் கலங்க வைக்கிறது.

நடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். இனி வாய்ப்புகள் குவியும். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும். நாடோடிகளின் வாழ்க்கைக்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு நிலப்பரப்புகளின் அழகை அள்ளிக்கொண்டு வரும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கலவர காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்து பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கதையோட்டத்தை நமக்கு கடத்துகிறது. ரேமண்டின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி மட்டும் சற்று தொய்வு தருகிறது.

நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது.

மொத்தத்தில் ‘ஜிப்ஸி’ கனமான காதல்.