கன்னட திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது தோழர்கள் என 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நடிகை ஹரிப்பிரியா கூறியதாவது:-
எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நான் ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்துதான் கன்னட நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் செய்தியை தெரிந்து கொண்டேன். நான் எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கும் இதுவரையில் சென்றதில்லை.
போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவர்களின் பெயர்களை போலீசார் வெளியிட வேண்டும். நான் மிகுந்த பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். தற்போது திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.