மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து வங்கியில் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. ஒரு நாள் ரயிலில் பயணம் செய்யும்போது நாயகி ரியா சுமனுடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வருகிறார்கள். இதேசமயம் அமைச்சராக இருக்கும் சரண்ராஜின் கருப்பு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும் மர்ம கொலைகளும் நடக்கிறது. இதற்கு காரணம் விஜய் ஆண்டனி என்று போலீஸ் அதிகாரியான கவுதம் மேனன் சந்தேகப்படுகிறார்.இறுதியில் சரண்ராஜின் பணங்களும் மர்ம கொலைகளும் நடப்பதற்கான காரணம் என்ன? இதற்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, காதல், ஆக்ஷன் என நடிப்பில் பளிச்சிடுகிறார். காமெடி செய்ய முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமன், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி இடையேயான ரொமான்ஸ் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கவுதம் மேனன், மிடுக்கான தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
கொள்ளையடிக்கும் அரசியல்வாதியிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கும் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் தனா. பழைய கதையை தூசி தட்டி கொடுத்திருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதை இன்னும் வலுவாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. ஆனால் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.
நவீன் குமாரின் ஒளிப்பதிவு பாராட்டும்படி அமைந்துள்ளது.
செந்தூர் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.