‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான் ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தேன். இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக பாராட்டுகிறார்கள்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர். முதலில் தமிழ் படங்களில் சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது.
ஆனால் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஷ்டப்பட்டு எடையை குறைத்தேன். ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.
நிசப்தம் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய பிறகு என்னை பார்த்தவர்கள் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லாதவர்களே இல்லை.
அதனால் அந்த தோற்றத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டு வருகிறேன். இது நிசப்தம் படம் எனக்கு கொடுத்த பரிசு”. இவ்வாறு அஞ்சலி கூறினார்.