2018 ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலிகான். இவர் நடிகர் சயிப் அலிகான் – அம்ரிதா சிங் தம்பதியின் மகள். சர்மிளா தாகூர், மன்சூர் அலிகான் பட்டோடியின் பேத்தி.
தொடர்ந்து ’சிம்பா’, ’லவ் ஆஜ்கல் 2’, சமீபத்தில் ’கூலி நம்பர் 1’ என சாரா அலிகான் நடித்துள்ளார். தற்போது அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோருடன் ‘அத்ரங்கி ரே’ என்கிற படத்தில் சாரா நடித்து வருகிறார்.
சாரா அலி கான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ’நான் நட்சத்திர அந்தஸ்தை பார்ப்பது இல்லை. ரசிகர்கள், நட்சத்திரம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.
வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் இது மாறும். நமது நோக்கம், கடின உழைப்பு, தாகம் ஆகியவையே முக்கியம். மற்றவை எல்லாம் மாறும், மாறிக்கொண்டே இருக்கும். எனக்குப் பிடித்த தொழிலில் நான் இருப்பது என் அதிர்ஷ்டம்.
எனக்குத் தெரிந்த என் நண்பர்கள், அவர்களுக்குப் பிடிக்காத வேலையை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கின்றனர். எனக்கு கிடைத்திருப்பது வேலையே இல்லை. எனது வாழ்க்கையில் எனக்கு அதிக ஆர்வத்தைத் தருவது என் வேலையே. மற்ற எதுவும் முக்கியமில்லை” இவ்வாறு சாரா கூறியுள்ளார்.