Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான் நடிகன் அல்ல.. சூர்யா கூறிய ஷாக்கிங் தகவல்

im not actor says suriya

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது படத்திற்காக ப்ரோமோஷன் பேட்டி கொடுத்துள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். யாரை சந்திக்கிறோம் யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதும் முக்கியம்.

நான் பிரமாதமான நடிகன் இல்லை. என்னால் கேமரா முன்பு உடனே நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஒரு கதையில் எனது வாழ்க்கையில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் இருக்குமானால் தைரியமாக நடிக்க தொடங்கி விடுவேன்.

நான் நினைத்து பார்க்காத இடம் சினிமாவில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே நல்ல வாய்ப்புகள் வரும்போது மெனக்கெட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு புது முயற்சியும் பயத்தை கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வளர்ச்சி அடைய முடியும். அடுத்த கட்டத்துக்கும் போக முடியும் என்பது எனது நம்பிக்கை. சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் புதிய முயற்சியாக இருக்கும். அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறேன். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் வாடிவாசல் என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறேன்.

இவ்வாறு சூர்யா கூறினார்.