மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர். வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் அமைந்தது.
இதனிடையே மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக நடிகர் தனுஷ் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து இப்படம் ‘கர்ணன்’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில், அது ‘கர்ணன்’ படத்தின் 2-ம் பாகம் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் வேறு கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.