‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அவர் காதல் தோல்வியில் இருந்து மீண்டது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.
நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.