Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ஜெயிலர் திரை விமர்சனம்

jailer movie review

ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற ரஜினி, மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி , மருமகள் மிர்ணா மேனன் மற்றும் பேரன் ரித்விக் இவர்களுடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் உள்ள வேலைகள், பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற விஷயங்களை ரஜினி செய்து வருகிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் கும்பலான சரவணன் குழுவை பிடிக்கிறார். என்ன ஆனாலும் இவர்களை விடக்கூடாது என்று தீர்க்கமாக இருக்கிறார்.

மேல் இடத்தில் இருந்து இவர்களை விடுவிக்க அழுத்தம் வந்தாலும் இவர்களை எதிர்க்க வசந்த் ரவி முடிவோடு இருக்கிறார். ஒருகட்டத்தில் வசந்த் ரவியை அந்த கும்பல் தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடத்தி விடுகிறது. இறுதியில் என்ன ஆனது? தன் மகனை கடத்தியவர்களை ரஜினி என்ன செய்தார்? இவர்களை எப்படி எதிர் கொண்டார்? ரஜினியின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. சாதாரண காட்சிகளை நடிப்பின் மூலம் மாஸ் காட்சியாக மாற்றி அசத்தியுள்ளார் ரஜினி. வழக்கமான நடிப்பு போன்று இல்லாமல் நெல்சன் படங்களுக்கு உண்டான காமெடி கலந்த நடிப்பை கொடுத்து ரஜினி அட்டகாசம் காட்டியுள்ளார். ரஜினியின் நடிப்பு ரசிகர்ளுக்கு தீணியாக அமைந்துள்ளது. இந்த வயதிலும் ஹிட் கொடுக்க முடியும் என்று ரஜினி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

ரஜினியின் மனைவியாகவும், குடும்பத் தலைவியாகவும் ரம்யா கிருஷ்ணன் சிறப்பாக நடித்துள்ளார். நேர்மையான அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி நடிப்பை அழகாக கொடுத்துள்ளார். மாஸ்டர் ரித்விக் மற்றும் மிர்ணா மேனன் கொடுக்கப்பட்ட வேலை சரியாக செய்துள்ளனர். மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா என முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது பாராட்டப்படுகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை போன்று டார்க் காமெடியை சிறப்பாக வடிவமைத்து கைத்தட்டல் பெறுகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அலட்டல் இல்லாத காட்சியை வசனங்கள் மூலமாகவும் உடல் மொழியின் மூலமாக மாஸ் காட்டியுள்ளார். கதாப்பாத்திர வடிவமைப்பும் திரைக்கதையையும் சரியாக வடிவமைத்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பட்டாளங்கள் நிறைந்திருந்தாலும் அனைவரையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். இப்படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குனர் நெல்சன். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளது. மொத்தத்தில் ஜெயிலர் – விறுவிறுப்பான வெற்றி.

jailer movie review
jailer movie review