ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (ஆசாத்) மாறுவேடத்தில் பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய கடனை அடைகிறார். அதன்பின் சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீரமைக்கிறார். ஷாருக்கானை பிடிக்க சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் நயன்தாரா முயற்சி செய்கிறார். மற்றொரு பக்கம் விஜய் சேதிபதியின் கும்பல் அவரை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாராவை ஏமாற்றி ஷாருக்கான் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கும்பல் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரையும் கடத்துகிறது. அப்போது மற்றொரு ஷாருக்கான் (விக்ரம் ரதோர்) வந்து ஷாருக்கானை (அசாத்) கடத்தி செல்கிறார். இறுதியில் ஷாருக்கான் (விக்ரம் ரத்தோர்) யார்? ஷாருக்கான் (அசாத்) என்ன ஆனார்? ஷாருக்கான் நல்லது செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான் நடிப்பில் மாஸ் காண்பித்திருக்கிறார். ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கொடுத்து இருக்கிறார். இவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் நயன்தாரா. சிறப்பு படை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.
வித்தியாசமான இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது. ஆயுதங்கள் சப்ளை செய்யும் தொழிலதிபராக மனதில் பதிகிறார். இடைவெளிக்கு பிறகு வரும் தீபிகா படுகோனே அழகாக வந்து அழுத்தமான நடிப்பை பதிவு செய்து இருக்கிறார். பிரியாமணி, ஜாபர் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி இருக்கிறார் சஞ்சய் தத். கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களை கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்லீ. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது சிறப்பு. பல காட்சிகள் பிரமாண்டமாகவும் ரசிக்கும்படியும் எடுத்து இருக்கிறார். சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கும் அட்லீக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். காட்சிகள் அனைத்தையும் இவரது இசை தாங்கி பிடித்து இருக்கிறது. விஷ்ணுவின் ஒளிப்பதிவு வாவ் சொல்ல வைக்கிறது. மொத்தத்தில் ஜவான் – வென்றான்.