மதுரையில் பெரிய தாதாவாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவர் கதாநாயகனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது ஹீரோ ஒருவர் கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் முடிவு எடுக்கிறார். இதற்காக இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் போலீஸ் எஸ்.ஐ-க்கு தேர்வாகி கொலை பலியால் ஜெயிலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார்.எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார். அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர் தேடுவதை அறிந்து, உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடனே பயணிக்கிறார். படம் எடுக்கும் சாக்கில் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.இறுதியில் ராகவா லாரன்சை எஸ்.ஜே.சூர்யா கொன்றாரா? எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் ராகவா லாரன்ஸுக்கு தெரிந்ததா? ராகவா லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா படம் எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். அவரது தோற்றம், நடை, உடை, உடல் மொழி அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.மற்றோரு கதாநாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யா போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாகவும் படம் எடுக்கும் இயக்குனராகவும் கவனிக்க வைத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்சை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ரகவா லாரன்ஸும் எஸ்.ஜே.சூர்யாவும் கிளைமேக்ஸில் பட்டையை கிளப்பியுள்ளனர்.மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 1975 ஆண்டு காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு. முதல் பாதி நகரத்தின் ரவுடி வாழ்க்கையும், இரண்டாம் பாதியில் காடு, காட்டுவாசிகளின் வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர். கேங்ஸ்டர் கதையில் காட்டை கெடுக்கும் அரசியலை சொல்லி இருப்பது சிறப்பு. யானை வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. கிளைமேக்ஸ் காட்சி மூலம் பாராட்டை பெறுகிறார்.
படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பல காட்சிகளுக்கு இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு நகரத்தையும், காட்டையும் அழகாக படமாக்கி இருக்கிறது. ஷபிக் முகமது அலி படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது. பிரவீன் ராஜா காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர். டோன் பெஞ்ச் நிறுவனம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.”,