நடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார். ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார்.
இந்நிலையில் +2 தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டி வருகிறது. ரோகித்தை காதலிக்க தொடங்கும் ஆனந்தி அவரை சந்திப்பதற்காக சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார்.
இறுதியில் இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார்? ஐஐடியில் ரோகித்திடம் அவரது காதலை சொல்ல முடிந்ததா? கிராமத்து பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
பெண் கல்வி என்பதை மையமாக கொண்டு கதை அமைத்த ராஜசேகர் துரைசாமிக்கும், தயாரித்த துரைசாமிக்கும் படத்தை வெளியிடும் மாஸ்டர்பீஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.
ஆனந்திக்கு படத்தை தாங்கி பிடிக்கும் கதாபாத்திரம். படத்தின் எந்த காட்சியிலும் ஆனந்தியே தெரியவில்லை. கமலி மட்டுமே தெரிகிறார். இதுவே அவர் இந்த கதாபாத்திரத்துக்கு எத்தனை பொருத்தமானவர் என்பதை நிரூபிக்கிறது. குறும்புக்கார மாணவி, தான் கொண்ட லட்சியத்துக்காக எந்த கடின உழைப்பையும் கொடுக்கக்கூடிய பொறுப்புள்ள பெண், தன்னை முடக்கி போடும்போதும் கேலி, கிண்டல் செய்யும்போதும் எல்லா துன்பங்களையும் சிரித்துக்கொண்டே கடந்து அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்கும் கல்லூரி மாணவி என தனது நடிப்பால் அசத்துகிறார்.
ஆனந்திக்கு பக்கபலமாக இருந்து உதவும் பாத்திரத்தில் பிரதாப் போத்தன். ஆனந்திக்கு சொல்லி கொடுக்க மறுப்பது, ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தியை அணுஅணுவாக தயார் செய்வது, ஆனந்தியின் வெற்றியை தன் வெற்றியாக உணர்வது என மனிதர் தனது அனுபவ நடிப்பால் நெகிழ வைக்கிறார்.
அழகம்பெருமாளும், ரேகா சுரேஷும் நம் பெற்றோரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நாயகனாக வரும் ரோகித்தும் சரியான தேர்வு. இமான் அண்ணாச்சி கலகலப்பாக படத்தை நகர்த்துகிறார்.
ஆனந்தியின் பள்ளி தோழியாக வரும் ஸ்ரீஜா நாயகியாக நடிக்கலாம். அழகாகவும் இருக்கிறார். சிறப்பாகவும் நடிக்கிறார். அறைத்தோழியாக வரும் அபிதா வெங்கட்டும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றம், பெண் கல்வியின் அவசியம் என அவர்களை ஊக்கப்படுத்தும் படமாக கமலி பிரம் நடுக்காவேரி அமைந்துள்ளது. சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தை காமெடி, காதல், குடும்பம் என அனைத்தையும் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் கமர்சியலாக சொன்ன விதத்தில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ராஜசேகர் துரைசாமி சேர்கிறார்.
தீனதயாளனின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு உதவி இருக்கின்றன. பின்னணி இசையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. ஜெகதீஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு நடுக்காவேரியின் பசுமைக்குள்ளும், ஐஐடி வளாகத்தின் சூழலுக்குள்ளும் நம்மை கூட்டி செல்கிறது.
மொத்தத்தில் ‘கமலி பிரம் நடுக்காவேரி’ கவர்கிறாள்.