Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

கர்ணன் திரைவிமர்சனம்

Karnan Movie Review

பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று பேருந்து ஏற வேண்டும். மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப் படுத்துகிறார்கள்.

இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.

இதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் தனுஷ், படத்தில் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கர்ணனாக மனதில் நிற்கிறார். அசுரனை தாண்டி வேற ஒரு தனுஷை பார்க்க முடிகிறது. நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் என கைத்தட்டல் வாங்குகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தை திறம்பட செய்தியிருக்கிறார்.

1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாதா… என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.

கதாபாத்திர தேர்வும் அருமை. தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.