தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். லாக்டவுனுக்கு முன் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தனர்.
இந்நிலையில், இன்று கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், இந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் தயாரிப்பாளர் தாணு சாருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இப்படத்திற்கு இசையின் மூலம் பெரும்பங்காற்றிய சந்தோஷ் நாராயணனுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.
இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.