கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்துள்ள .கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் யஷ்சுக்கு, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த 7-ந் தேதி வெளியாகி உள்ளது. அந்த டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பது, புகையிலையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த விதி கே.ஜி.எப்.-2 டீசரில் மீறப்பட்டுள்ளது. அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். நீங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளீர்கள். நீங்கள் செய்வதை அந்த ரசிகர்கள் பின்பற்றுவார்கள். புகைப்பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட சாத்தியம் உள்ளது. சமூக அக்கறை கொண்ட நீங்கள், சமுதாய நலனுக்காக புகைப்பிடிக்கும் காட்சியை படத்தில் இருந்து நீக்கி சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.