Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

கழுவேத்தி மூர்க்கன் திரை விமர்சனம்

kazhuvethi-moorkkan movie review

ஒரே கிராமத்தில் வாழ்ந்து வரும் அருள்நிதியும், சந்தோஷ் பிரதாப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்களில் அருள்நிதி மிகவும் கோபக்காரர். சந்தோஷ் பிரதாப் மிகவும் பொறுப்பானவர். இவர்களின் நட்பு அரசியல்வாதி ராஜ சிம்மனின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்கிறது. இதனால், சூழ்ச்சி செய்து சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்கிறார். இந்தப்பழி அருள்நிதி மீது விழுகிறது. போலீஸ் ஒருபக்கம் அருள்நிதியை தேட, அவரோ சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை அருள்நிதி பழிவாங்கினாரா? போலீசிடம் அருள்நிதி சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி, கரடு முரடான மூர்க்க சாமி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காதல், சென்டிமென்ட் காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். பூமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரது நடிப்பு ஒரு சில இடங்களில் ஈர்க்கவில்லை. கதாநாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் துறுதுறுவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரது திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் சாயா தேவி, கண்ணீர் விட்டு மனதில் பதிந்திருக்கிறார். அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் முனிஸ்காந்த். இரண்டு சமூகத்தை வைத்து பல கதைகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கௌதம ராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சந்தோஷ் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.

அருள்நிதி, துஷாரா விஜயன் காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்து இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் பழைய படங்களின் சாயல் தெரிகிறது. ஒரு சில வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. டி இமானின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஶ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து காண்பித்து இருக்கிறார். மொத்தத்தில் கழுவேத்தி மூர்க்கன் நேர்மையானவன்.

kazhuvethi-moorkkan movie review

kazhuvethi-moorkkan movie review