கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.