Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

குபேரா திரை விமர்சனம்

Kubera Movie Review

மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து பிடிக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முடிவு செய்கிறார். இதற்காக முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார் ஜிம் சர்ப். நாகார்ஜுனா, தனுஷ் உட்பட நான்கு பிச்சை காரர்களை பினாமி மாதிரி வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார். அதன்படி மூன்று பிச்சை காரர்களை வைத்து பணத்தை மாற்றி அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். தனுஷ் பேரில் இருக்கும் பணத்தை மட்டும் மாற்ற முடியாமல் போகிறது. மேலும் தனுஷ் தன்னை கொன்றுவார்கள் என்று நினைத்து தப்பித்து ஓடிவிடுகிறார். இறுதியில் நாகார்ஜுனா, தனுஷை கண்டுபிடித்து பணத்தை மாற்றினாரா? தனுஷ் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நடிகர் தனுஷ், வெகுளியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பிச்சைகாரனாக தோற்றத்திலும் நடிப்பாலும் பளிச்சிடுகிறார். மாஸ் ஹீரோ போல் இல்லாமல் எதார்த்தமாக தனுஷ் நடித்து இருக்கிறார். `வாழ்றதுக்காக பிழைக்கணும்’என்று தனுஷ் பேசும் போது தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது. நாயகியாக நடித்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார். தனுஷுடன் தப்பி ஓடும் காட்சியில் கவனம் பெற்றிருக்கிறார்.நேர்மையான சிபிஐ அதிகாரியாக நல்லவனாகவும், குடும்பத்துக்காக வில்லனாகவும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் நாகார்ஜுனா. இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம் சேர்த்து இருக்கிறது. ஜிம் சர்ப் ஸ்டைலான வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

பணத்தை வைத்து நடக்கும் அரசியல், அரசியலில் பாதிக்கப்படும் எளிய மக்கள் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்தி இருப்பது சிறப்பு. பிச்சைக்காரர்கள் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக போய் வா நண்பா பாடல் குத்தாட்டம் போட வைத்து இருக்கிறார்.

நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.

Sree Venkateswara Cinemas LLP and Amigos கிரேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

Kubera Movie Review
Kubera Movie Review