மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையையுடன் ஊரில் இருந்து கல்லூரிக்கு வரும் தனது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் விமல். பின்னர் சிலரால் விமலின் தங்கை உயிர் பிரிகிறது. இறந்த தன்னுடைய தங்கையின் உடலை மாணவர்களின் கல்விக்காக தானமாக விமல் வழங்கிவிடுகிறார். தங்கை படித்த கல்லூரியின் அருகில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டு தினமும் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கும் தன் தங்கையின் உடலை விமல் பார்த்து செல்கிறார். மாணவர்களின் கல்விக்காக அவர்களின் படிப்பு செலவு போன்ற பிற விஷயங்களுக்காக உதவி வருகிறார்.
இதனிடையே கல்லூரியில் பணம் கட்டாத மாணவர்களை குறிவைத்து அவர்களை தப்பான வழிக்கு அந்த கல்வி நிறுவனம் கொண்டு செல்கிறது. இதனை அறிந்த விமல், அவர்களை மீட்டு தவறான வழியில் கொண்டு சென்றவர்களை பழிவாங்குகிறார். மறுபுறம் தன் தங்கையின் இறப்புக்கு காரணமானவர்களை தேடி வருகிறார். இறுதியில் தங்கை கொலைக்கு காரணமானவர்களை விமல் கண்டுபிடித்தாரா? மாணவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றவர்களை விமல் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. தங்கையை இழந்த அண்ணனாக வேதனையில், பிற மாணவர்களை படிக்கவைப்பதில் ஜொலித்திருக்கிறார் விமல்.
இவரின் எதார்த்த நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. தன்யா ஹோப் இந்த கதையை எதற்காக தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எழுகிறது. இவரின் கதாப்பாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை. படத்தில் தோன்றும் போஸ் வெங்கட், சரவண சக்தி, வினோதினி வைத்தியநாதன், மகாநதி சங்கர் என பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர். பணப்பிரச்சனையால் கல்வி பயில முடியாத சூழல் ஏற்படும் மாணவர்களை குறிவைக்கும் கும்பல் குறித்த கதையை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்த நினைத்துள்ளார் இயக்குனர் சரவண சக்தி. கதை சரியாக இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை.
படத்தின் காட்சிப்படுத்தல் தரமாக இல்லாதது போன்று இருக்கிறது. சில இடங்களில் குறும்படத்தில் பயன்படுத்தும் கேமராக்களை பயன்படுத்தியுள்ளார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் வசனங்களில் வலிமை இல்லை. வைட் ஆங்கிள் ரவியின் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் காட்சிகளில் தரம் இல்லை. மகாலிங்கத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே. மொத்தத்தில் குலசாமி – விறுவிறுப்பு இல்லை.