Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

குருப் திரை விமர்சனம்

Kurup Movie ReviewKurup Movie Review

கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

நாயகன் துல்கர் சல்மான் விமான படையில் பயிற்சி எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்லும் துல்கர் சல்மான், சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார்.

வெளிநாட்டில் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு இந்தியா திரும்பும் துல்கர் சல்மான், அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறார். இறுதியில் இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி கைப்பற்றினாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதாக ஊரை நம்ப வைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், நெகடிவ் வேடத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்திற்காக பல கெட்-டப் போட்டு அசத்தி இருக்கிறார். அந்த கெட்-டப்புகளும் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. நடை, உடை என தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷோபிடா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துல்கரின் உறவினராக வரும் ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவரது கதாபாத்திரம் திரைக்கதை ஓட்டத்திற்கு அதிகம் உதவி இருக்கிறது. போலீசாக வரும் இந்திரஜித் சுகுமாரன், நண்பராக வரும் பரத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். 1980களில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதால், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அனைத்திலும் பாராட்டை பெற்றிருக்கிறார். முதல் பாதி பல முடிச்சுகளுடன் மெதுவாக செல்ல, பிற்பாதியில் அந்த முடிச்சுகளை கழட்டும் விதம் அருமை.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், கலை இயக்குனரின் வேலையும் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது. சுசின் ஷாம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘குருப்’ பாராட்டலாம்.