ஊர் தலைவராகவும், சாதி தலைவராகவும் கெத்தாக வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்திக்கு, சாதி மாறி காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அறவே பிடிக்காது. ஊரில் யாராவது வேறு சாதியினரை காதலித்தால், அவர்களை வெறித்தனமாக தாக்குவது, தேவைப்பட்டால் கொலை செய்வது என எந்த எல்லைக்கும் செல்கிறார். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.
இவருடைய மகன் சோழவேந்தன் வேறொரு சாதியினரை சேர்ந்த நாயகி தேஜாவை காதலிக்கிறார். இந்த விஷயம் வேல ராமமூர்த்திக்கு தெரியவர, மகனை கண்டிக்கிறார். ஆனால், அவரோ வீட்டை விட்டு ஓடிச்சென்று, தேஜாவை திருமணம் செய்து வாழ்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடையும் வேல ராமமூர்த்தி, சோழவேந்தனையும், தேஜாவையும் கொலை செய்ய தேடி வருகிறார்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் வேல ராமமூர்த்தியால் கொலை செய்யப்படுகிறார் தேஜா. பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சோழவேந்தன் நகரத்துக்கு சென்று விடுகிறார். அங்கு எம்.எஸ்.பாஸ்கருடன் வேலை செய்துக் கொண்டு குழந்தையை வளர்த்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கரின் மகளையும் திருமணம் செய்துக் கொள்கிறார்.
இந்நிலையில், இறந்ததாக நினைத்த மனைவி தேஜா, சோழவேந்தனை தேடி வருகிறார். அதே சமயம், எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் மற்றும் பேத்தியை அழைத்துக் கொண்டு வேல ராமமூர்த்தியை சந்தித்து குடும்பத்துடன் இணைய முயற்சிக்கிறார்.
இறுதியில் சோழவேந்தன் இரண்டு மனைவிகளில் யாருடன் சேர்ந்தார்? வேல ராமமூர்த்தியின் ஜாதி வெறி தணிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சோழவேந்தன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகள் தேஜா ரெட்டி, காயத்ரி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். சிறுமியாக வரும் பேபி சவி சிறப்பான நடிப்பு.
சாதிவெறி பிடித்த பெரிய மனிதர் பாத்திரத்தில் வேல ராமமூர்த்தியும் அவரை திருத்த போராடும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் படத்தை கலகலப்பாகவும் நகர்த்துகிறார்.
கண் முன்னே நடக்கும் ஆணவக்கொலை சம்பவங்களை கோர்த்து ஒரு கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் அலெக்சாண்டர். கல் நெஞ்சக்காரரையும் அன்பால் மாற்றலாம் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அமுதபாரதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சூரியன், நௌசத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘குட்டி தேவதை’ சுவாரஸ்யம் குறைவு.