Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

லாபம் திரை விமர்சனம்

Laabam Movie Review

பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு. பல வருடங்களுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார். அதே சமயம் விஜய் சேதுபதி கிராம மக்களை திரட்டி கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இறுதியில் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழித்தாரா? விஜய் சேதுபதி பல வருடங்கள் கழித்து ஊருக்கு வர என்ன காரணம்? கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக வலம் வருகிறார். விவசாயத்தின் நன்மை, விவசாயிகள் பணம் சம்பாதிப்பது பற்றி படம் முழுக்க பேசுகிறார். ஒரு கட்டத்தில் அதிகம் பேசுவது போல் தோன்றுகிறது.

நடனக் கலைஞராக வரும் ஸ்ருதி ஹாசன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியை காதலிப்பது, அவருக்கு உதவுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். காமெடியை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜெகபதி பாபு வழக்கமான வில்லனாக வந்து செல்கிறார். விஜய் சேதுபதி நண்பர்களாக வரும் கலையரசன், டேனி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

விவசாயத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால், சொன்ன விதம் குழப்பமாக இருக்கிறது.

இப்படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் ஆங்காங்கே வந்து செல்கிறது. டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘லாபம்’ அதிக லாபம் இல்லை.