Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரை விமர்சனம்

last-6-hours movie review

மூன்று நண்பர்களும், அவர்களின் சினேகிதியும் திருட்டு தொழில் செய்து, வாழ்க்கையில் பணக்காரர்களாகி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த நான்கு பேர்களில் ஒருவர், ஆஸ்துமா நோயாளி. இவர்கள் நான்கு பேர்களும் திட்டம்போட்டு நகரின் மத்தியில் உள்ள ஒரு பங்களாவில் கொள்ளையடிக்கிறார்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் கொள்ளை வெற்றிகரமாக முடிந்ததை விருந்தும் மருந்துமாக கொண்டாடுகிறார்கள்.

அடுத்த கொள்ளையை எங்கே, எப்படி நடத்துவது? என்று ஆலோசிக்கிறார்கள். நகரை விட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில், இருபது கோடி பணம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைக்கிறது. இந்த கொள்ளையை நடத்துவதில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது. தலைவர் போல் இருப்பவர், ”வேண்டாம்” என்று பின்வாங்குகிறார்.

மற்ற மூன்று பேர்களும் அவருக்கு ஆசைகாட்டி, சம்மதிக்க வைக்கிறார்கள். திட்டமிட்டபடி, நான்கு பேரும் ஒரு நள்ளிரவில் பாழடைந்த பங்களாவுக்குள் நுழைகிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. கட்டுமஸ்தான உடற்கட்டுடன், பரத் உட்கார்ந்திருக்கிறார். அவர் கண்பார்வையை இழந்தவர். காதுகளை கண்களாக்கி, கொள்ளையர்களுடன் மோதுகிறார்.

ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் கொள்ளையன் கொல்லப்படுகிறான். பரத்தின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல், மற்ற கொள்ளையர்களும் திணறுகிறார்கள். பரத் யார், அவரிடம் இருந்து மற்ற மூன்று கொள்ளையர்களும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை. படத்துக்காக பரத், ‘‘சிக்ஸ் பேக்” உடற்கட்டுக்கு மாறியிருப்பது தெரிகிறது. பாழடைந்த பங்களாவுக்குள் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு கொள்ளையர்களுடன் மோதி ஜெயிப்பது, ‘‘சபாஷ்” சொல்ல வைக்கிறது. முன்கதையில் அழகான பரத் மகிழவும், நெகிழவும் வைக்கிறார். அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் ஆகிய 4 பேரும் கொள்ளையர்களாக நடித்து இருக்கிறார்கள்.

கைலாஸ் மேனன் பின்னணி இசையும், சினு சித்தார்த் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு திகில் கூட்டுகிறது. டைரக்டர் சுனிஷ்குமார் விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். மொத்தத்தில் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ பார்க்கலாம்.

last-6-hours movie review
last-6-hours movie review