போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் விஷால். லத்தி சார்ஜில் பெயர் பெற்ற இவர், ஒரு தவறுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்படுகிறார். பின்னர் உயர் அதிகாரியின் நண்பரான டி.ஜி.பி பிரபுவின் சிபாரிசின் மூலம் சில மாதங்களில் மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார் விஷால். சில நாட்களில் பிரபுவின் மகளிடம் பிரபல தாதாவின் மகன் ரமணா தகாத முறையில் நடந்துக் கொள்கிறார். டி.ஜி.பியாக இருந்தும் தாதா மகனை பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த சமயத்தில் பிரபுவிடம் ரமணா சிக்கிக்கொள்கிறார். ரமணாவை அடித்து நடக்க முடியாமல் செய்யவேண்டும் என்பதற்காக லத்தி ஸ்பெஷலிஸ்ட் விஷாலை வரவைக்கிறார்.
விஷாலும் ரமணாவை வெளுத்து வாங்கி விடுகிறார். இதனால் கோபமடையும் ரமணா, விஷாலை கொல்ல நினைக்கிறார். இறுதியில் ரமணா, விஷாலை கொலை செய்தாரா? மிகப்பெரிய தாதாவிடம் இருந்து விஷால் எப்படி தப்பித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷால், முழு கதையும் தாங்கி நிற்கிறார். மனைவி, மகனுடன் எதார்த்தமான நடிப்பையும், வில்லன்களை எதிர்க்கும் போது ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மகனை தேடி அலையும் போது நெகிழ வைத்து இருக்கிறார். கதாநாயகியாக வரும் சுனைனா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரமணா. பழிவாங்க துடிக்கும் காட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்து இருக்கிறார். இவரின் தந்தையாக நடித்து இருக்கும் சன்னி, சுறா கதாபாத்திரத்திற்கு அதிகம் பொருந்தவில்லை. அடியாளாக வரும் வினோத் சாகர், நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிள் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் வினோத் குமார். மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகம் எடுக்கிறது. முதல் பாதி தேடுதல் வேட்டையும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் வேட்டையும் நடத்தி இருக்கிறார். ரொமான்ஸ், காமெடி இல்லாமல் திரைக்கதை அமைத்து இருப்பது சிறப்பு. இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சியின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களை விட பின்னணி இசையே அதிகம் மேலோங்கி நிற்கிறது. ஸ்டண்ட் காட்சிகளை இயக்கிய பீட்டர் ஹேயினுக்கு பாராட்டு. பால சுப்ரமணியம் மற்றும் பால கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மொத்தத்தில் ‘லத்தி’ – புதிய யுக்தி.