Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் திலீப் குமார் மறைவு – பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்

Legendary actor Dilip Kumar passes away at 98

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும். அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்திய சினிமாவில் திலீப் குமாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைகளின் நினைவில் எப்போதும் இருக்கும். திலீப் குமாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.