Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

லிப்ட் திரை விமர்சனம்

lift movie review

ஐடி ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் இருக்கிறது. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். பின்னர் அம்ரிதாவிற்கு கவின் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கவின் அதை மறுத்துவிடுகிறார்.

இப்படி சென்று கொண்டு இருக்க, கம்பெனியில் ஒரு முக்கிய புராஜெக்டை முடிக்க வேண்டி இருப்பதால், கவின் மட்டும் இரவு கம்பெனியிலேயே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். நள்ளிரவில் வேலை முடிந்த பிறகு தரைத்தளத்திற்கு செல்ல கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவரால் தரைத்தளத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை.

இந்தநிலையில், நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சிக்கி இருப்பதை அறியும் கவின் அவரை காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் இவ்வாறு செய்ததாக சந்தேகப்படும் அம்ரிதா, பின் அவரை புரிந்து கொள்கிறார். இதையடுத்து இருவரும் படி வழியாக தரைத்தளத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கின்றனர். இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் லிப்ட்.

நாயகன் கவின், ஸ்மார்ட்டான ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் சரி, நடிப்பிலும் சரி திறம்பட நடித்து கவர்ந்திருக்கிறார்.

ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலை பலு, அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளையும் சொல்லி இருக்கிறது இந்த படம். இயக்குனர் வினீத் வரப்பிரசாத், அவருக்கு இது அறிமுக படம். இப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் திகில் மற்றும் அமானுஷ்ய விஷயங்களை புகுத்தி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பது பின்னடைவு.

படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின் இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘லிப்ட்’ திகிலூட்டுகிறது.