- விலை மாதுவாக இருக்கிறார் சாயா சிங். ஒரு நாள் போலீஸ் ரெய்டு நடத்தும் தம்பி ராமையா, சாயா சிங்கின் அழகில் மயங்கி அவருடன் உடலுறவு கொள்கிறார். சில மாதங்களுக்கு பின் சாயா சிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். சாயா சிங்கின் குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் பாதிப்படைந்த குழந்தையுடன் சாயா சிங் டாக்டரிடம் செல்ல, பரிசோதித்த டாக்டர் குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் பல லட்சங்கள் செலவாகும் என சொல்கிறார்கள்.
பலருடன் உடலுறவு வைத்துக்கொண்ட சாயா சிங், தன்னிடம் உடலுறவு கொண்டவர்களில் குழந்தைக்கு தந்தை யார்? என கண்டுபிடித்து அவரிடம் இருந்து மருத்துவ செலவுக்கான பணத்தை வாங்க முயற்சி செய்கிறார். முதலில் போலீசான தம்பி ராமையாவை தேடி பிடித்து அவரிடம் உதவி கேட்கிறார். ஆனால் தம்பி ராமையா தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வதோடு, சாயா சிங்குடன் உடலுறவு கொண்டவர்களில் ஒருவரான அமைச்சரின் மகனிடம் குழந்தை மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை இருந்து பறிக்க திட்டம் போட்டு தருகிறார். - தம்பி ராமையாவும், சாயா சிங்கும் போடும் திட்டத்தின் மூலம் அமைச்சர் மகனிடம் இருந்து பணம் பறித்தார்களா? சாயா சிங் குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாயா சிங், விலை மாதுவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் மொழியில் கவர்ச்சியில்லாமல், காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் சாயா சிங் கதாபாத்திரத்தை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
- போலீசாக வரும் தம்பி ராமையா, அமைச்சரின் மகனாக துஷ்யந்த், பேபி ர ஃஅத் பாத்திமா, மந்திரியாக ஜெயபிரகாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். சில காட்சிகளில் திரைக்கதையின் வேக தடை இருந்தாலும், விலை மாது சம்பந்தப்பட்ட அழுத்தமான கதை என்பதால் சொல்ல வந்த கதையை அனைவரும் ரசிக்கும்படி தெளிவாக, மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். சிவா தர்ஷனின் ஒளிப்பதிவும், ஜெர்வின் ஜோஷுவாவின் இசையும் சேரனின் பின்னணி இசையும் கதைக்கேற்றபடி சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் ‘லில்லி ராணி’ எளிமையானவள்.