சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழிந்தும் இவர்களுக்கு பிள்ளை இல்லை இதனால் ஊர் இவர்களை ஒரு மாதிரி பேசுகிறது. சுவாசிகாவின் தம்பியான சூரி ஊரில் ஒரு வேலையை பார்த்து வருகிறார். 10 வருடங்களுக்கு பிறகு சுவாசிகா கர்ப்பம் ஆகிறாள். தனக்கு ஒரு மருமகன் வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் மிகவும் அன்போடவும், அக்கறையுடனும் சூரி அவரது அக்காவை பார்த்துக் கொள்கிறார்.அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும் போது அங்கு மருத்துவராக இருக்கும் ஐஷ்வர்யா லட்சுமியுடன் காதல் ஏற்படுகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சுவாசிகாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார் சூரி. பின் சூரிக்கும் ஐஷ்வர்யாவிற்கும் திருமணம் ஏற்படுகிறது. இப்பொழுது தன் அக்கா மகன் நிலனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது ?நிலனால் ஏற்பட்ட பிரச்சனை என்ன? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனான சூரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார். நிலனுடன் பாசம் காட்டுவதும், அவனை பிரிந்து வாடும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். இரண்டாம் நாயகனாக நடித்த பிரகீத் சிவன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சுவாசிகா அவரது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பாபா பாஸ்கர் நாம் எதிர்பார்த்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். ஐஷ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ்,விஜி சந்திரசேக, கீதா கைலாசம் என அனைவரும் அவர்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே உள்ள பந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் சூரியின் கதையை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பலமும் பலவீனமாக அமைந்தது எமோஷ்னல் காட்சிகள் தான். முதல் பாதி கதை மிகவும் நகைச்சுவை மற்றும் எமோஷ்னல் காட்சிகள் கலவையாக இருந்தது படத்தின் பலம். இரண்டாம் பாதி முழுவது சொந்தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், சோகமான அழுகை காட்சிகளால் நிரம்பியுள்ளது அது பலவீனமாக அமைந்துள்ளது. சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். படத்தின் பின்னணி இசையை ரசிக்க முடிகிறது.
தினேஷ் புருஷோத்தமன் மண் மணம் மாறாமல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.