தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சிபி சத்யராஜ். இவர் பழங்கால சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடிவுடன் கூட்டணி வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். சிலை கடத்தல் கும்பலை போலீஸ் ஒரு பக்கம் தேடி வருகிறார்கள். இந்நிலையில், மாயோன் மலையில் இருக்கும் கோயிலில் ரகசிய அறை இருப்பதாகவும், அதற்குள் புதையல் இருப்பதாகவும் ஹரிஷ் பெராடிக்கு தகவல் வருகிறது.
அந்த புதையலை எடுக்கும் பணியை சிபி சத்யராஜுக்கு ஹரிஷ் பெராடி கொடுக்கிறார். அந்த கோவிலுக்குள் செல்லும் சிபி சத்யராஜுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் சிபி சத்யராஜ் கோவிலுக்குள் சென்று புதையலை எடுத்தாரா? சிலை கடத்தல் கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், சிபி சத்யராஜ்க்கு பக்கபலமாக நடித்திருக்கிறார்.
அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிகுமார், ஊர் தலைவராக வரும் ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் ஹரிஷ் பெராடி. தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம், திரைக்கதை எழுதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு ஏற்றவாறு இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர். ஆன்மீகமா, அறிவியலா என்று வேறுபாடு காட்டாமல், படமாக்கி இருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல் காட்சிகளின் நடுவே வரும் சிறு கதைகளும், அதை படமாக்கிய விதமும் ரசிக்கும் படி உள்ளது.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘மாயோன்’ மாயம் செய்தவன்.