“பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தொடர்ந்து மலையாளம், தமிழ் சினிமாவில் நடித்து வந்த மடோனா செபாஸ்டியன் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது . விஜய்யுடன் நான் ரெடி தான் பாடலுக்கு இணைந்து ஆடிய அவரது நடனம் பிரபலம் அடைந்தது.
இதுகுறித்து மடோனா செபஸ்டியன் கூறியதாவது:-லியோ படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக எனக்கு அமைந்தது. இந்த படத்தில் நடிப்பது குறித்து என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் படம் வெளியாகுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சில ஊடகங்களில் இந்த செய்தி கசிந்துவிட்டது. விஜய் படப்பிடிப்பில் குழந்தை மாதிரி இருப்பார். ஆக்சன் என்றவுடன் ஆளே மாறிவிடுவார். எங்கள் அனைவரையும் லோகேஷ் கனகராஜ் வேறு உலகத்துக்கு கொண்டு சென்று விட்டார். அர்ஜுனை பார்ப்பதற்கே பயமாக இருக்கும். சஞ்சய் தத் ரொம்ப சுவீட்டான மனிதர். இவர்கள் அனைவரோடும் சேர்ந்து நடித்தது மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு மடோனா செபாஸ்டியன் கூறினார்.”,