அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்துள்ளது மலையாள திரைஉலகம்.
பிரபல மலையாள இயக்குநரான சச்சிதானந்தம் என்கிற சச்சி, சில படங்களில் இணை கதாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இயக்குநராக சச்சிக்கு இரண்டாவது படம் அய்யப்பனும் கோஷியும்.
முதலில் அனார்கலி என்ற படத்தை இயக்கியிருந்தார் சச்சி. அவரது இயக்கத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது.
லாக்டவுனுக்கு முன்பு வரை அதிகம் வசூல் செய்த மலையாளப் படமாக பேசப்பட்டது இப்படம். இதில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்தனர். மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர்.
மலையாள சினி உலகில் இந்த வருடம் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தை சாச்சி (கே.ஆர்.சச்சிதானந்தம்) என்கிற இயக்குனர் திறம்பட இயக்கி இருந்தார்.
மாரடைப்பு
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இயக்குநர் சச்சிதானந்தன். அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.
அதனால் ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சச்சி. அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி சச்சிதானந்தத்தின் உயிர் பிரிந்தது.
திரைத்துறையினர் அதிர்ச்சி
அவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் சச்சிதானந்தன் அடிப்படையில் ஒரு கதையாசிரியர் ஆவார்.
வழக்கறிஞர்
இவரும் சேது என்ற கதாசிரியரும் இணைந்து மலையாளத்தில் பல நல்ல திரைப் படங்களை தயாரித்துள்ளனர். வழக்கறிஞரான சச்சி, சினிமா மீது கொண்ட காதலால் திரைத்துறைக்கு வந்தார். சேது – சச்சி கூட்டணியில் பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு படங்களை இயக்கி இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார் சச்சி.