Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மங்காத்தா 10வது வருட கொண்டாட்டம் – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

Mankatha 10th Anniversary Celebration - Producer Flexibility

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் ‘மங்காத்தா’ படத்துக்கு என்று தனி இடமுண்டு. இன்றோடு இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு #10YearsOfMankatha என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் ‘மங்காத்தா’ குறித்து தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘’மங்காத்தா’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வரை தல அஜித்துக்கு அப்படம் ஒரு சிறந்த ப்ளாக் பஸ்டராக இருந்து வருகிறது. தீவிர அஜித் ரசிகன் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் ‘மங்காத்தா’வில் இருந்தன. ஸ்டைலிஷ் மேக்கிங், யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலம், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், எல்லாவற்றுக்கும் மேலாக அஜித்தின் கிளாஸ் மற்றும் மாஸ். நூற்றில் ஒரு படம் தான் நடிகர்கள், படக்குழுவினர், ரசிகர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க அதிபர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்தும். ‘மங்காத்தா’ அப்படியான அரிய ரத்தினங்களில் ஒன்று.

‘மங்காத்தா’ ஒரு உண்மையான ப்ளாக்பஸ்டர் என்று சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அப்படம் ரிலீஸ் ஆனது முதல் இன்று வரை இந்தப் பயணம் குறித்து நான் நினைத்துப் பார்க்கும்போது ‘மங்காத்தா’ அற்புதமாக இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் அது எனது இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. எல்லாருக்கும் பிடித்தமான படங்களின் பட்டியலில் நிச்சயமாக ‘மங்காத்தா’ இடம்பெற்றிருக்கும். இந்த மைல்கல்லில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு ரசிகனாக உணரவைக்கும் படங்களில் ‘மங்காத்தா’வும் ஒன்று” இவ்வாறு பதிவு செய்துள்ளார்.