மன்மத லீலை
நடிகர் அசோக் செல்வன்
நடிகை சம்யுக்தா ஹெக்டே
இயக்குனர் வெங்கட் பிரபு
இசை பிரேம் ஜி
ஓளிப்பதிவு தமிழ் ஏ அழகன்
நாயகன் அசோக் செல்வனின் வாழ்க்கையில் 2010ல் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து 2020ல் நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.
2010ல் ஆர்குட் மூலம் தனக்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழகுகிறார் அசோக் செல்வன். வீடியோ மூலம் பேசி வரும் அசோக் செல்வன், ஒரு நாள் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சம்யுக்தாவை சந்திக்கிறார் அசோக்செல்வன். அப்போது இருவரும் மது போதையில் தவறு செய்துவிடுகிறார்கள். விடியும் நேரத்தில் வீட்டிற்கு சம்யுக்தாவின் அப்பா வந்துவிடுகிறார்.
அடுத்து, 2020ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன். ஒரு நாள் ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் சென்றவுடன், தற்செயலாக வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் இணைந்து தவறு செய்து விடுகிறார். மறுநாள் காலை ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.
2010ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020ல் தன் வீட்டில் இருந்து ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல், பாசம், ரொமான்ஸ், பரிதவிப்பு, என நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் காமெடி, நக்கல், ஆக்ஷன் என்று ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக சம்யுக்தா ஹெக்டே வீட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
நாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். அழகாக வந்து அளவான நடிப்பை ஸ்மிருதி வெங்கட் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படத்திற்கு மன்மத லீலை என்று பெயர் வைத்திருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், அதிக கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது சிறப்பு. இரு வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் கதையை புரியும்படி திரைக்கதை அமைத்த இயக்குனர் வெங்கட் பிரபுக்கு பாராட்டுகள். இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யம் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிரேம்ஜியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல், தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டு கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மன்மத லீலை’ ரசிக்கலாம்.