ஆராய்ச்சியாளரான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஒருநாள் கிளப்பில் இருந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு செல்வராகவன் இறந்து விடுகிறார்.
இந்த டைம் டிராவல் போன் மெக்கானிக்காக இருக்கும் விஷால் (மார்க்) கையில் கிடைக்கிறது. தன்னுடைய அப்பா விஷால் (ஆண்டனி) தான் அம்மாவை கொன்றான் என்றும், அவன் மிகவும் மோசமானவன் என்றும் எஸ்.ஜே.சூர்யாவை (ஜாக்கி பாண்டியன்) அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் விஷால்.
இந்நிலையில் டைம் டிராவல் போனை வைத்து தன் அம்மாவை மரணத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் விஷால். இந்த முயற்சியில் தன் தந்தை நல்லவர் என்று தெரிந்துக்கொள்கிறார்.
மேலும் தன் தந்தையை கொன்றது எஸ்.ஜே.சூர்யா (ஜாக்கி பாண்டியன்) என்றும் தெரிந்துக் கொள்கிறார். இதனால் தன் தந்தையை காப்பாற்றி நிகழ் காலத்திற்கு கொண்டு வர விஷால் முயற்சி செய்கிறார். இறுதியில் விஷால் தன் தந்தையை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாரா? டைம் டிராவல் போனால் வேற என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழுக்கதையும் நகர்கிறது. இருவருக்கும் அப்பா, மகன் என இருவேறு தோற்றங்களில் நடித்து இருக்கிறார்கள். விஷால் நடிப்பு, ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது தோற்றமும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். குறிப்பாக தன் அப்பாவிற்கு போன் செய்யும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
ரீது வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஓய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். செல்வராகவனுக்கு இன்னும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.
டைம் டிராவலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த மாதிரி கதைகளில் திரைக்கதையை கையாள்வது கடினம். அதை தெளிவாக இயக்கி இருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான திரைக்கதையால் படத்தை எந்த இடத்திலும் போராடிக்காமல் நகர்த்தி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ஆக்சன் காட்சிகளில் பழைய பாடல்களை பின்னணியாக வைத்திருப்பது சிறப்பு. அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மொத்தத்தில் மார்க் ஆண்டனி – கலகலப்பு.