Tamilstar
Movie Reviews

மாஸ்டர் திரைவிமர்சனம்

master movie review

மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.

அந்தப் பள்ளியை விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர் விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் இதில் புதுவிதமாக தெரிகிறார். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனம் வேற லெவல்.

கடந்த சில ஆண்டுகளாகவே மது அருந்தும் காட்சிகளையும் புகைபிடிக்கும் காட்சிகளையும் தவிர்த்து வந்த விஜய் இந்த படத்தில் மதுவுக்கு அடிமையானவராக வருகிறார். ஆனால் சில காட்சிகளிலேயே அதன் ஆபத்துகளை உணர்த்துவதுடன் மதுவுக்கு அடிமையானவர்கள் மீண்டு வந்தால் சமூகத்துக்கு எப்படி பங்காற்ற முடியும் என்பதையும் விளக்கி இருப்பது அருமையான கருத்து.

விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம். அது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கி இருக்கிறார். படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம் தான்.

நாயகி மாளவிகா மோகனன், அழகு, பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக அல்லாமல் விஜய்யின் மாற்றத்துக்கு காரணமானவராக வந்து நடிப்பிலும் அசத்துகிறார்.

பவானியாக வரும் விஜய் சேதுபதி. கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிகம் பேசாமல் அவர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஜய்யுடன் மோதும் காட்சிகளில் தானும் ஒரு மாஸ் ஹீரோ என்பதை உணர்த்துகிறார்.

இவருக்கு பக்கபலமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் நடிப்பும் அற்புதம். இளம் வயது விஜய் சேதுபதியாக வரும் மாஸ்டர் மகேந்திரன், தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

மேலும் சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. படம் 3 மணி நேரம் ஓடினாலும் எந்த காட்சியிலுமே போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே வரும் ஒரு வரி காமெடி பன்ச் வசனங்கள் கைதட்டி ரசிக்க வைக்கின்றன. பூவையாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை திறம்பட கையாண்டுள்ளார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கான சில காட்சிகளை அமைத்திருந்தாலும், பெரும்பாலும் தனது ஸ்டைலில் தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் லோகேஷ்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் பிரமாதம். அனிருத்தின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

அதேபோல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் மாஸாக எடுத்துள்ளனர். மெட்ரோ சீன் ஆகட்டும், விஜய், விஜய் சேதுபதி மோதும் காட்சி ஆகட்டும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளவிதம் சிறப்பு.

3 மணி நேர படம் எந்த இடத்திலும் சலிப்பே இல்லாமல் செல்ல பிலோமின் ராஜின் படத்தொகுப்பு முக்கிய காரணம்.ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். சரியாக எங்கே தொடங்கி எங்கே முடிக்க வேண்டும் என்று கச்சிதமாக வெட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் மாஸ்டர் முதல் பாதியில் விறுப்பாக தன் பாடத்தை ஆரம்பித்து இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல் ஆக்குகிறர் மாணவர்களை(ரசிகர்களை).