நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு ஏற்கனவே போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனாலும் அன்றைய தினம் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என போலீசுக்கு சவால் விடும் விதமாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை நேற்று சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கேரளாவில் இருந்து இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்டார் மீரா மிதுன். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார், அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து அடம்பிடித்து வருகிறாராம். விசாரணை முடிந்தபின் மீரா மிதுன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.