ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’. டி.ஜெயலக்ஷ்மி கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி, சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
வி.இ.இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தளபதி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா: “நான் இசையமைத்து 10 வருடங்கள் ஆகிறது. அதற்கு காரணம் என் உடல் நிலை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தது தான்.
10 வருடங்களுக்கு பிறகு ஜெய் ஆகாஷ் என்னிடம் வந்து ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ படத்திற்கு இசையமைத்து தர வேண்டும் என்றார். நானும் இசையமைத்து கொடுத்திருக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெய் ஆகாஷை எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். கடுமையான உழைப்பாளி, சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார், அவர் நிச்சயம் முன்னணி ஹீரோ ஆவார்.
இப்போதுள்ள இசையமைப்பாளர்களின் பாடல்கள் புரியவில்லை என்று சிலர் சொல்வார்கள். அதாவது தங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் இதுபோல சொல்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை இந்த காலத்துக்கு ஏற்ப அவர்கள் இசையமைக்கிறார்கள், அவர்களும் நன்றாகவே இசையமைக்கிறார்கள். என்னிடம் இப்போது இசையமைக்க சொன்னால், என் பாணியில் மெலோடி பாடல்கள் போடுவேன், அதேபோல் இப்போதைக்கு ரசிகர்களின் பேவரைட் என்ன, லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்படி பாடல் போட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது தான் உண்மை. எனவே காலத்துக்கு ஏற்ப இசையை மாற்றிக்கொடுக்க வேண்டும்.
அப்படி தான் இந்த படத்தில் ஒரு பாடல் செய்திருக்கிறேன், அந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்த ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்: “தம்பி ஜெய் ஆகாஷ் கடுமையான உழைப்பாளி, அவரை ராமகிருஷ்ணா படத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது சில வருடங்கள் அவர் காணாமல் போய்விட்டவர் திரும்ப வந்துவிட்டார். பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. தேவா தொடர்ந்து இசையமைக்க வேண்டும், அவரது தேனிசை பாடல்கள் தொடர்ந்து வெளியாக வேண்டும். இந்த படத்தில் நடித்திருக்கும் கிகி வால்ஸ் கனடாவில் இருந்து பட புரமோஷனுக்கு வந்திருக்கிறார் வாழ்த்துகள்.
அவரது நடனம் நன்றாக இருந்தது. படம் கமர்ஷியலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள், எங்க இருந்து ரிட்டன்ஸ் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்து வருகிறாரா அல்லது திஹார் ஜெயிலில் இருந்து வருகிறாரா, என்பது படத்தை பார்த்தால் தான் தெரியும். பெரிய இயக்குநர்களும், நடிகர்களும் சினிமாவில் கொள்ளை அடிக்கிறார்கள். சிறிய நடிகர்களாக அறிமுகமாகி பிறகு பெரிய நடிகர்கள் என்று கூறி அதிகமான சம்பளம் வாங்கி சினிமாவை அழிக்கிறார்கள். இதுபோன்ற சிறிய படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கின்றன. அந்த வகையில், ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெற்று சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ் பேசுகையில், “அமைச்சர் படம் ஏற்கனவே வெளியாகி விட்டது.
அதில் அமைச்சர் சாதுவாக இருப்பார். அப்படி இருப்பவரால் சில விஷயங்களை செய்ய முடியாது. எனவே அமைச்சர் அதிரடி செயல்களை செய்து தவறுகளை திருத்துவது தான் ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’. ராஜன் சார் சொன்னது போல் அமைச்சர் எங்கிருந்து வருகிறார் என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. இந்த படத்திற்காக எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.
டாக்டர்.செளந்தரராஜன் பேசுகையில், “’அமைச்சர் ரிட்டன்ஸ்’ பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. ஜெய் ஆகாஷ் படத்தை அழகாக இயக்கியிருப்பதோடு, மிக நன்றாக நடித்திருக்கிறார். இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது. ஜெய் ஆகாஷ் போன்ற வளரும் கலைஞர்களை பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் வளர்த்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகும். அமைச்சர் ரிட்டன்ஸ் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
@@@
இரு நண்பர்களின் கதை “பூதமங்கலம் போஸ்ட்”
அந்த கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகிவந்தனர்.
இவர்களின் நட்பை ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம் தான் சி.சி.வி.குரூப்ஸ் சார்பில், பொன் கோ. சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன் கோ விஜயன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படமான ” பூதமங்கலம் போஸ்ட்” பதில் தரும்.
சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் வளர்ந்துள்ள இதில், விஜய் கோவிந்தசாமி, ராஜன் மலைச்சாமி, அஸ்மிதா, மோனிகா ரெட்டி, ராட்சசன் பசுபதி, மாஸ்டர் தக்சித் தேவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரேம்குமார் ஒளிப்பதிவையும், அர்ஜுன்—-கே.ஆர்.கவின் இருவரும் இணைந்து இணைந்து இசை மீட்ட, கவிஞானி பிறைசூடன், புதுக்கோட்டை பிகே சேகர் பாண்டியன் இருவரும் பாடல்கள் எழுத, ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், நாக் அவுட் நத்தா சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடித்து தனது மூன்றாவது படமாக இயக்கி உள்ளார் ராஜன் மலைச்சாமி.
@@
நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது “ஜம்பு மகரிஷி”
விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க முயல்கிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.
திருவானை கோவிலில் ஜம்பு மகேஷ்வரர் கோவிலில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் ஜம்பு மகேஸ்வரராஜ் வெண் நாவல் மரமாய் இருக்கும் ஜம்பு மகரிஷியும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டு இருக்கும் உண்மை வரலாறோடு இதன் திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டுள்ள படம் தான் “ஜம்பு மகரிஷி “.
புதுமுகம் பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுவரவான ப்ரியா நடித்துள்ளார். மேலும்
ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் ” மஸ்காரா ” பாடல் புகழ் அஸ்மிதா முக்கிய வேடத்தில் வருகிறார்.
நிறைய பொருட்செலவில் 250 அடி உயர சிவன் சிலை வடித்து சென்னை அருகே இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து 2000 துணை நடிகர் நடிகையர், ஐம்பதிற்கும் மேற்பட்ட நடன குழுவினர் பங்கேற்க, பாடல் காட்சி ஒன்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
அரக்கன் வாதாவியாக பாகுபலி பிரபாகரும் அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ராஜ்கீர்த்தி படத்தொகுப்பையும், பி. புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர்.
தேனிசை தென்றல் தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.
காசியில் உள்ள வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
டி.வி.எஸ். பிலிம்ஸ் சார்பில் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தணிக்கை அதிகாரிகளால் ” யு “சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள “ஜம்பு மகரிஷி ” படத்தின் கதை திரைக்கதை எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.
