எல்.ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நான் அவளை சந்தித்த போது”
சந்தோஷ் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அப்போது தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு சென்னை வரும் சாந்தினி தன்னுடைய உறவினரின் முகவரியை துளைத்து விட அவருக்கு உதவுகிறார் சந்தோஷ்.
இதனை தவறாக புரிந்து கொண்ட சாந்தினியின் உறவினர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க, ஒரு நாள் இரவு மட்டும் சாந்தினியுடன் இருந்து விட்டு தப்பி விடுகிறார் சந்தோஷ்.
ஆனால் அவரின் மனம் மீண்டும் சாந்தினியை தேட ஊருக்கு திரும்பி செல்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதை.
தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர். சந்தோஷும் சாந்தினியும் அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். சினிமாவில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டத்தை சந்தோஷ் திரையில் இயல்பாக பிரதிபலித்துள்ளார். முதலில் சாந்தினியை ஒதுக்கும் அவர் பின்னர் அவரது அன்பை புரிந்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
எதிர்பாராமல் கிடைத்த வாழ்க்கையாக இருந்தாலும் அது நம்மைவிட்டு போய்விடுமோ என்ற போராட்டத்தை சாந்தினி தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்தமூர்த்தி, சாந்தினியின் பெற்றோரான ஜிஎம்.குமார், சுஜாதா உள்ளிட்ட மற்ற அனைவருமே தங்கள் சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள்.
இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் எளிய கதையை எடுத்து அதற்கு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கொடுத்து இருக்கிறார். படத்தின் இறுதியில் நிஜ நபர்களை கதாபாத்திரங்களுடன் பொருத்தி காண்பிப்பது சுவாரசியம்.
ஹித்தேஷ் முருகவேலின் இசையும் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. மக்களின் மனதில் பதியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.