தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர், “கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியாகும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன். இந்தியன் 2 படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் நம்ம ஊரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. எல்லா விஷயத்திலையும் நுணுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார்” என்று பேசினார்.
மேலும், ‘லியோ’ படத்தில் கமல்ஹாசன் குரல் இடம்பெற்றதால் வந்த ட்ரோல் குறித்த கேள்விக்கு, “கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்லை. ‘லியோ’ படம் பார்க்கும் போது கடைசியாக கமல் குரல் வரும்போது திரையரங்கம் அதிருகிறது அதுக்கு மேல் என்ன சொல்ல. லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மிகப்பெரிய பக்தன்” என்று பேசினார்.