சதீஷும் அவரது நண்பர் ரமேஷ் திலக்கும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். மசாலா படம் எடுக்கும் இயக்குனரான சதீஷ் எப்படியாவது ஒரு தயாரிப்பாளரிடம் பேசி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க சதீஷின் காதலியான தர்ஷா குப்தா தனக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது என்று சாமியார் பாலாவை சந்திக்கிறார். அப்போது பாலா இந்த பேயை பிடித்தே தீருவேன் என்று பூஜை நடத்துகிறார்.
இந்த பூஜையில் சதீஷும் அவரது நண்பர் ரமேஷ் திலக்கும் வந்து தகராறு செய்யவே பேய் தர்ஷா குப்தாவின் உடம்பில் இறங்கி விடுகிறது. இதையடுத்து பேய் இருக்கும் இடமான அனகொண்டாபுரம் என்ற இடத்திற்கு இவர்கள் இருவரையும் அழைத்து செல்கிறது.
அங்கு இந்த பேயை சதீஷ் தான் அடக்க முடியும் என்ற நிலைமை வருகிறது. இறுதியில் சதீஷ் இந்த பேயை அடக்கினாரா..? இல்லையா..? இந்த பேய் எதற்கு வருகிறது? சதீஷுக்கும் பேய்க்கும் உண்டான தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பேயாக நடித்திருக்கும் சன்னி லியோன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார். தமிழ் மொழி வசனம் பேசுவதில் தனக்கான முழு உழைப்பும் கொடுத்து பாராட்டை பெறுகிறார்.
முக்கிய கதாபாத்திரமான சதீஷ் தன் காமெடியில் கவனம் செலுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். கதாநாயகியாக வரும் தர்ஷா குப்தா தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார். ரமேஷ் திலக், பாலா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
இயக்குனர் யுவன் ஒரு கவர்ச்சியான பேய் படத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். பயமோ பரபரப்போ இல்லாமல் ஜாலியாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இருந்தாலும் ஒரு சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்க கூடியவையாக உள்ளது.
ஜாவேத் ரியாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பார்க்கும் வண்ணம் உள்ளன.
மொத்தத்தில் ஓ மை கோஸ்ட் – ஜாலியான பேய்