நாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுவதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் அமிதாஷ், சிலை கடத்தல்காரர் வீட்டில் இருக்கும் ஐம்பொன் சிலை ஒன்றை திருட முயற்சிக்கிறார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வீட்டிலும் அவர் திருட முயற்சித்து, அவரிடம் சிக்கிக்கொள்கிறார்.
போலீஸ் வேலையை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் சரத்குமார், அமிதாஸ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். தங்கையின் மருத்துவ செலவுக்காக சரத்குமாருடன் பயணிக்க அமிதாஷும் சம்மதம் தெரிவிக்கிறார். இருவரும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சிலை கடத்தல் விவகாரத்தில் அமிதாஷை பலியாடாக்கி விட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகவும் சரத்குமார் திட்டம் போட, இறுதியில் அவரது எண்ணம் பலித்ததா?, இல்லையா? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘பரம்பொருள்’.
சரத்குமார் நடித்தாலே அது வெற்றி படம் தான் என்ற ரீதியில் அவரது தற்போதைய கதை தேர்வு அமைந்திருக்கிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாக அவர் நடித்த ‘போர் தொழில்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது அவர் மோசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.
பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பயணிக்கும் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கும் சரத்குமார், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தான் மோசமான போலீஸ் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிலும் போலீஸிடம் சட்டம் பேசும் இளைஞர்களை கஞ்சா வழக்கில் சிக்க வைத்துவிட்டு, அதை சாதாரணமாக கையாளும் காட்சியில் நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் அமிதாஷ், அப்பாவியான முகத்தோடு, ஆபத்தான சூழ்நிலைகளை அதிரடியாக சமாளிப்பது என்று கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக போராடுபவர், சரத்குமாருடன் இணைந்து பயணிக்கும் போது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி, சிலை வடிக்கும் கலைஞராக நடித்திருக்கிறார். அவருக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும், அவர் வரும் ஒரு சில காட்சிகளிலேயே சிலை போல் அழகாக இருக்கிறார்.
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் சரத்குமார் அவரிடம் சிலை பற்றி பேசும் போது, அதை கவனிக்காமல் வேறு ஒரு விசயம் பற்றி அவர் தொடர்ந்து பேசும் காட்சி திரையரங்கையே கைதட்டலால் அதிர செய்து விடுகிறது.
சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தங்கள் உடல் மொழி மூலமாகவே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அமிதாஷின் தங்கையாக நடித்திருக்கும் சுவாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜ், செந்தில் குமரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.
எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு பகல் மற்றும் இரவு நேர காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக குறைவான ஒளியில் கூட காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகங்களாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார். முதல் பாதியில் சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், இரண்டாம் பாதியில் படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார்.
சிலை கடத்தல் மற்றும் கடத்தப்படும் சிலைகள் அனைத்தும் பல கோடிக்கு வாங்கப்படுகிறதா? போன்ற தகவல்களை தெளிவாக விளக்கியிருக்கும் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ், திரைக்கதையை வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார்.
முதல்பாதியில் சிலை வியாபாரம் தொடர்பான காட்சிகள் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றுவது சற்று தொய்வடைய செய்தாலும், இரண்டாம் பாதி திரைக்கதை அந்த குறையை போக்கி, படத்தை படுவேகத்தில் நகர்த்தி செல்கிறது. அதிலும், சிலை உடைந்த பிறகு சரத்குமார் மற்றும் அமிதாஷ் என்ன செய்ய போகிறார்கள், என்ற எதிர்பார்ப்பு சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.
ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நம்மை பரபரப்புடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இறுதியில் எதிர்பார்க்காத திருப்புமுனையோடு படத்தை முடித்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ்.
மொத்தத்தில், ‘பரம்பொருள்’ பரபரப்புக்கு, விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத படம்.
ரேட்டிங் 3.5/5
