Tamilstar
Movie Reviews

பேய் இருக்க பயமேன் விமர்சனம்

Pei Irukka Bayamen Movie Review

நாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். விருப்பம் இல்லாமல் நாயகி காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தீஸ்வரன்.

திருமணத்திற்கு பின்பு, பேய் இருக்கும் வீடு என்று தெரிந்து கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய்கள் கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவருக்கும் பல தொந்தரவு செய்கிறது.

இறுதியில் அந்த வீட்டில் பேயாக இருப்பது யார்? எதற்காக பேயாக மாறினார்கள்? கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் பேயை எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனும், நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரமாவும் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விருப்பம் இல்லாத திருமணத்தால், எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. கார்த்தீஸ்வரனின் காமெடி கலந்த நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.

போலி சாமியார் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளர் முத்துக்காளை, நிஜ சாமியார் நெல்லை சிவா, பேய்களாக நடித்திருக்கும் அர்ஜுன், நியதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனே இப்படத்தை இயக்கி இருக்கிறார். பேய் படங்கள் என்றாலே, பழிவாங்குதல், பெரிய பிளாஷ்பேக் என்று வழக்கமான படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன். படத்தின் நீளத்தையும், தேவையற்ற காட்சிகளையும் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

அபிமன்யுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘பேய் இருக்க பயமேன்’ திகில் குறைவு.